வாடிக்கையாளர் வாங்கிய கடனை குண்டர்களை வைத்து  வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

வாடிக்கையாளர் வாங்கிய கடனை குண்டர்களை வைத்து  வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை குண்டர்களை நியமித்து வசூலிக்க வங்கிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்று மத்திய அரசு மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியில் கடன் பெற்று இருந்தால், அவரிடம் கடனை குண்டர்களை நியமித்து வலுக்கட்டாயமாக வசூலிக்க வங்கிக்கு எந்தவிதமான அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை.

கடனை வசூலிப்பதற்கு எந்த முறைகளை பின்பற்ற வேண்டும், என்பது குறித்து ரிசர்வ் வங்கி தனிவிதிமுறைகளை வகுத்து வங்கிகளுக்கு அளித்துள்ளது. இந்த விதிமுறைகளைத்தான் அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் மீட்பு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் தனியாக இருக்கின்றன, அவர்கள் மூலம் முறைப்படி போலீஸார் ஆய்வு மூலம், விசாரணைகள் மூலம் கடனை வசூலிக்கலாம்.

கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக, தொடர்ந்து துன்பப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. நாகரீகம் இன்றி கண்ணியம் அற்ற முறையில், கடன் பெற்றவர்களிடம் இரவு நேரத்தில், அதிகாலை நேரத்தில்  கடனைக் கேட்டு குண்டர்கள் மூலம் தொந்தரவு செய்யக்கூடாது.

இதுபோன்று குண்டர்கள் மூலம் தொந்தரவு வருவதாகவோ அல்லது கடன் மீட்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறி, நாகரீகமற்ற முறையில் நடந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறினால், புகார் அளிக்கலாம். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் புகார்கள் அளித்தால், வங்கிகள் மீதும், கடன் மீட்பு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடன் மீட்டு நிறுவனங்கள், முகவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு குறிப்பிட்ட பகுதிக்குள் சென்று கடனை வசூலிக்கவும் தடை செய்யப்படுவார்கள். மேலும் தொடர்ந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் கடன் மீட்பு நிறுவனங்கள் முகவர்களுக்கு தடைகாலத்தையும் நீட்டிக்க முடியும்

இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in