

பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு தற்போது பெரிய அளவில் மவுசு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு இந்த குகைக்கு 7,62,000 பேர் வருகை தந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு முடிந்துள்ளது.
கடந்த மே மாதம் மக்களவை இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.
அங்கு செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு அங்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். அவர் தியானம் செய்த குகை கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாக அமைந்தது. இயற்கையான குகையாக இருந்தாலும் பாறைகளை வெட்டி காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
குகையில் மின்சாரம், குடிநீர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு, அழைப்பு மணி, தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டே இது தயாராகிவிட்டாலும் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மோடியின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் குகையில் பொருத்தப்பட்டன. மோடி தியானம் செய்வது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
அந்த குகை தற்போது பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. கேதார்நாத்துக்கு செல்வோர் அந்த குகைக்கு சென்று பிரதமர் மோடியை போன்றே தியானம் மேற்கொள்வதை வாடிக்கையாக்கியுள்ளனர். இதனால் இந்த சீசனில் அங்குள்ள குகையில் 10 லட்சம் பேர் சென்று தங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதம் வரை அந்த குகைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
‘தியான குகைகள்’ அனைத்தும் கார்வெல் மண்டல் விகாஸ் நிகாம் லிமிடெட் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன. இதுகுறித்து ருத்ரபிராயாகை மாவட்ட ஆட்சியர் மகேஷ் கில்தியால் கூறுகையில் ‘‘கேதார்நாத் குகைகளுக்கு தற்போது பெரிய அளவில் மவுசு அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் குகைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு ஏற்கெனேவே குகைகள் இருந்தபோதும் பிரதமர் மோடி இங்கு வந் தியானம் செய்த பிறகே பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. கடந்த 50 நாட்களில் மட்டும் 7,62,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர்’’ எனக் கூறினார்.