சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்படுவதாக புகார் கூறிய டிஐஜி ரூபா பணியிடமாற்றம்

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்படுவதாக புகார் கூறிய டிஐஜி ரூபா பணியிடமாற்றம்
Updated on
2 min read

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளிக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார் தெரிவித்த க‌ர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சசிகலாவிடம் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்பு சலுகை காட்டி வருவதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக நவீன வசதிகள் கொண்ட சமையலறை, படுக்கை அறை, உதவியாளர்கள் உட்பட ஏராளமான விதிமுறை மீறல் நடந்துள்ள‌தாகக் கடந்த 13-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா டி. மவுட்கில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனிடையே சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் டிஐஜி ரூபாவின் புகாரை மறுத்தனர். மேலும் ரூபாவின் அறிக்கையை எதிர்த்து உள்துறை செயலருக்கு 16 பக்க அறிக்கையும் அனுப்பினர்.

இந்நிலையில் க‌டந்த சனிக்கிழமை மீண்டும் சிறையை ஆய்வு செய்த ரூபா, சசிகலா, தெல்கி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைக்கான ஆதாரங்களை அதிகாரிகள் அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக சிசிடிவி வீடியோ, புகைப்படம், முக்கிய‌ கோப்புகள் உள்ளிட்ட‌ ஆதாரங்களை அழித்து விட்டதாக 2-வது அறிக்கையை அவர், காவல்துறை இயக்குநர் ஆர்.கே.தத்தாவுக்கு அளித்தார்.

அரசுக்கு கடும் நெருக்கடி

டிஐஜி ரூபாவின் அறிக்கையை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த‌ முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இந்த குழுக்களில் உள்ள ரவுடிகள் ஒருவரை ஒருவர் தாக்கும் சூழல் ஏற்பட்டதால், சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ஆதரவான குழுவினர் ரூபாவின் ஆதரவாளர்களைத் தாக்கியதால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். கைதிகளுக்கிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் உடனடியாக 50-க்கும் மேற் பட்டோர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரத் தால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

டிஐஜி ரூபா பணிமாற்றம்

இந்நிலையில் கர்நாடக அரசு நேற்று சிறைத்துறை டிஐஜி ரூபா உள்ளிட்ட 4 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தது. சிறைத்துறை டிஐஜியாக இருந்த‌ ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

காரணம் சொல்ல முடியாது

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, 'காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது நிர்வாக ரீதியான நடவடிக்கை. அதன் காரணத்தை எல்லாம் ஊடகங்களுக்குச் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றார்.

ராஜ்நாத் சிங்கிடம் முறையீடு

இதனிடையே கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, ' சிறை முறைகேட்டை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. அந்த விவகாரத்தில் விசா ரணை முழுமையாக நிறைவடை

யாத நிலையில் இடமாற்றம் செய்யப்படுவது குற்றவாளி களுக்குச் சாதகமாக முடியும். எனவே டிஐஜி ரூபாவை இடமாற் றம் செய்த கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முறையிட்டுள்ளேன்' என்றார்.

மஜத மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமார சாமி கூறுகையில், 'நேர்மையான அதிகாரியை இடமாற்றம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. சசிகலாவின் லஞ்சத்துக்கு முதல்வர் சித்தராமையா துணை போய் உள்ளார். டிஐஜி ரூபாவின் இடமாற்றத்தைக் கண்டித்து மஜத சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.சத்திய நாராயண ராவ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in