போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தொடர்பு: தெலுங்கு நடிகர், இயக்குநர்களுக்கு நோட்டீஸ்

போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தொடர்பு: தெலுங்கு நடிகர், இயக்குநர்களுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

ஹைதராபாத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின், அபின் ஆகிய போதைப்பொருள் களை விற்றுவந்த ஒரு கும்பலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருப்பது தெரியவந்தது.

எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்த கலால் துறைக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டது. இதற்காக தனி விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய அக்குழுவினர் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர். இதில் அமெரிக்கவாழ் இந்தியரான அணீஷ் என்பவவரிடமிருந்து 16 யூனிட் எடையுள்ள விலை உயர்ந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ரிதுல் அகர்வால் என்பவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின்படி, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 3 இளம் கதாநாயகர்கள், 3 இயக்குநர்கள், 2 தயாரிப்பாளர்கள், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் உட்பட 10 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் அனைவரும் 6 நாட்களுக்குள் விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்களின் பெயர் விவரங்களை வெளியிட விசாரணை குழு மறுத்து விட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in