

கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு விநாடிக்கு 6,400 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 74.55 அடியாக (124.8 அடி) உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,750 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், விநாடிக்கு 4,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல கபினி அணைக்கு நீர்வரத்து 6,500 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி நீர் நிர்வாக ஆணைய பொறியாளர் பசவராஜ் நேற்று கூறும்போது, “கடந்த ஜூன் 29-ம் தேதியில் இருந்து காவிரி யில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப் படுகிறது. திங்கள்கிழமை மாலை முதல் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணை களில் இருந்து விநாடிக்கு 6,400 கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப் பட்டுள்ளது. இந்த நீர் செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணையை அடையும்” என்றார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகள் 4-ம் நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் ஸ்ரீரங்கப்பட்டினம், மத்தூர், பாண்ட வப்புரா ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி நதி பாதுகாப்பு குழு தலைவர் மாதே கவுடா கூறும்போது, “கிருஷ்ணராஜசாகர் அணை முழுமையாக நிரம்புவதற்குள் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரை நிறுத்தாவிடில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.
நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம்
இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டியுள்ளது. கர்நாடக விவசாயிகளைத் தவிக்க வைத்துவிட்டு, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மதிக்கும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக தமிழகத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. காவிரி நீரை திறந்துவிடாமல் இருந்தால், தமிழக அரசு நீதிமன்றத்துக்கு செல்லும். அப்போது கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படும். எனவே விவசாய சங்கத்தினர் அரசின் நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.