ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தூக்கு ரத்து; விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தூக்கு ரத்து; விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
Updated on
3 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதே போன்ற மற்றொரு வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து கடந்த ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுக்கும் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தண்டனை பெற்ற மூவரும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தங்களின் செயலுக்காக சிறிது கூட வருத்தப்படவில்லை. எனவே, அவர்களுக்கு கருணை காட்டத் தேவையில்லை. மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைப்பதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மூவரும் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இதுபோன்று கருணை மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறையில் கைதிகள் எந்தவிதமான கொடுமையையும் அனுபவிக்கவில்லை என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாக நிரூபிக்க வேண்டிய அவசியம் கைதிகளுக்கு இல்லை. தங்கள் கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பல முறை கைதிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதிலிருந்தே அவர்கள் பட்ட வேதனை புரிகிறது.

கருணை மனுக்களை பரிசீலிப்பதற்கு கால அளவு எதுவும் விதிக்கப்படவில்லை என்பதற்காக, அதன் மீது வருடக் கணக்கில் முடிவு எதையும் எடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருணை மனுக்கள் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வைகோ பேட்டி

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறும்போது “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இதை நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

நீதிபதிகளின் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ன் படி மூவரையும் விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்” என்று வைகோ கூறியுள்ளார்.

'கருணை மனுக்கள் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்'

அரசமைப்புச் சட்டத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத்தலைவருக்கும், 161வது பிரிவின்படி ஆளுநருக்கும், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை காட்டும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இது மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்படும் என்கிற நம்பிக்கை கீற்றை தருகிறது. எனவே தமக்கு தரப்பட்டுள்ள கருணை காட்டும் அதிகாரத்தை பயன்படுத்தி நியாயமான கால வரையறைக்குள் அந்த மனுக்கள் மீது துரிதமாக முடிவு எடுப்பது அவசியம்.

கருணை மனுக்களை பரிசீலித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் விதிக்கப்படவில்லை எனும்போது இன்னும் முறையான வழியில் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருக்கிறது. அப்போதுதான் ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். எனவே அரசு உரிய ஆலோசனையை தகுந்த காலவரைக்குள் குடியரசுத் தலைவருக்கு வழங்கினால் அதைக்கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவர் கருணை மனு மீது முடிவுக்கு வர முடியும்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் கொடிய மன வேதனையை ஏற்படுத்துகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்து வந்த பாதை…

21.5.1991 சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

20.5.1992 பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா உள்ளிட்டோர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக உயிரிழந்து விட்டனர். மீதமிருந்த 26 பேர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டனர்.

28.1.1998 நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

11.5.1999 முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

8.10.1999 நளினி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

25.4.2000 நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைத்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, மற்ற 3 பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

26.4.2000 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.

4.5.2000 கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சேர்ந்தன.

21.6.2005 கருணை மனுக்களை 5 ஆண்டுகள் 1 மாத கால தாமதத்துக்குப் பின் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது

12.8.2011 கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் 4 மாத தாமதத்துக்குப் பின் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன.

9.9.2011 அன்று தூக்கு தண்டனை நிறை வேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

30.8.2011 மரண தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

1.5.2012 சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

18.2.2014 முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in