

காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி மசோதாவை அமல் செய்வது தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 6 போலீஸாருக்கு முதல்வர் மெகபூபா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவை உயிரோட்டமாக வைத்திருப்பது ஜனநாயகம். அதன் காரணமாகவே அண்டை நாடுகளைவிட நமது நாடு முன்னணியில் உள்ளது. ஆனால் காஷ்மீரில் ஜனநாயகம் வேரூன்ற தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதன் குரல்வளை நெரிக்கப் படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டினார். அந்த நாட்டுக்கு சென்று வந்தார். ஆனால் அதற்குப் பதிலாக பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அமைதி முயற்சிகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை.
காஷ்மீரில் நமது பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி வருகின்றனர். எல்லையோர கிராம மக்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை துப்பாக்கியாலோ, ராணுவ பலத்தாலோ அமைதியை ஏற்படுத்த முடியாது.
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். கடந்த 2002-ம் ஆண்டிலும் மக்கள் ஜனநாயக கட்சி இதே கருத்தை முன்வைத்தது. இப்போதும் அதையே வலியுறுத்துகிறோம். பிரிவினைவாதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, காஷ்மீரில் தீவிரவாதம் வேரறுக்கப் படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி பிரிவினைவாதி களுடன் மீண்டும் பேச்சுவார்த் தையை தொடங்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக அதனை நிராகரித்து வருகிறது.