பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்கள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்கள் பிச்சைக்காரர்கள் அல்ல: அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டிப்பு
Updated on
2 min read

பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்களுக்கு நிவாரணம் அளிப்பது அரசின் கடமையே தவிர நிவாரணம் அளிப்பதன் மூலம் அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அல்லது இழப்பீடு அளிப்பது அரசின் கடமையாகும், இது ஏதோ தானதர்மச் செயல் அல்ல, என்று கூறியுள்ள மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர அரசின் செயல்பாடு ஈவு இரக்கமற்றதாக உள்ளது என்று கடுமையாக கண்டித்துள்ளது.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில் அந்தச் சிறுமி அரசின் ‘மனோதைரிய யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிவாரணம் கோரியிருந்தார்.

புறநகர்ப்பகுதியான போரிவலியைச் சேர்ந்த இந்தச் சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகக் கோரி இந்த இழப்பீட்டைக் கோரியுள்ளார். அக்டோபர் 2016-ல் கோரப்பட்ட நிவாரணத்தொகை குறித்து அரசு கோர்ட்டுக்குத் தெரிவிக்கையில் ரூ.1 லட்சம் கொடுத்ததாகக் கூறியது.

மேலும், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அரசு கூறுகையில் இது இருவருக்கிடையே சம்மதத்தின் பேரில் நடந்த உறவு என்பதால் ரூ.2 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுர், ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது, “அரசு இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறது என்று தெரியவில்லை. இது மிகவும் இதயமற்ற இரக்கமற்ற அணுகுமுறை. அரசு இந்த விவகாரங்களில் தங்கள் இதயபூர்வமாக உணர்வு பூர்வமாக முடிவுகளை எடுக்காதவரை எதுவும் நடக்காது” என்று தெரிவித்தது.

மேலும் நீதிமன்றத்திற்கு வந்திருந்த மும்பை புறநகர் உதவி மாவட்ட ஆட்சியரிடம் கடுமையாக கேள்வி எழுப்புகையில், “நீங்கள் (அரசு) உங்கள் இதயத்திலிருந்து சிந்திக்க வேண்டும். இத்தகைய உணர்வற்ற அணுகுமுறை கூடாது. இத்தகைய பாதிப்புப் பெண்களுக்கு அரசு உதவுவது கடமையாகும். பாதிக்கப்பட்ட பெண்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, நீங்கள் கொடுக்கும் நிவாரணம் தான தர்மமும் அல்ல, இழப்பீடு கோருவது அவர்களது உரிமை. உங்கள் உறவினர்களில் ஒருவருக்கு இப்படி நிகழ்ந்திருந்தால் எப்படி அணுகுவீர்களோ அப்படி அணுக வேண்டும்” என்று கடுமையாகக் கேட்டனர்.

மேலும், “மனோதைரியம் என்பது தன்னம்பிக்கை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நம்பிக்கை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் எதிராகவல்லவா செயல்படுகிறீர்கள்.

இது வரிசெலுத்துவோர் பணம், இதில் அரசுக்கு என்ன பிரச்சினை? நாம் பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து இத்தகைய பாதிப்பு பெண்களுக்குக் கொடுக்க வேண்டுமா என்ன? உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்களின் படி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் அரசு இதனைச் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகிய பிறகே அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்காக அதிகாரி ஒருவரை அவமதிப்பு குற்றம்சாட்டி ஒருநாள் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் அரசுக்கு புரியவரும்.

அதிகாரிகளின் அலட்சியம் எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் அணுகுமுறை வலியை ஏற்படுத்துகிறது. அடுத்த விசாரணையின் போதும் உதவி ஆட்சியர் நீதிமன்றத்தில் இருக்க உத்தரவிடுகிறோம்” என்று கூறி மார்ச் 8-ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தது.

இடைப்பட்ட காலத்தில் மனோதைரிய திட்டம் எப்படி செயல்படுகிறது என்ற விவரங்களையும் எப்படி முடிவுகள் எடுக்கிறது என்பதையும், கடந்த 1 ஆண்டில் இப்படிப்பட்ட வழக்குகளில் எத்தனை பேருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in