

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட 13 பேருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 13 பேர் மீது உத்தரபிரதேசத்தின் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் 13 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.கே.கவுல் கூறிய போது, “பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை புதுப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அத்வானி, ஜோஷி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடிய போது, ‘‘அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்த ஹாஜி மெகபூப் அகமது சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதாடிய போது, ‘‘பாபர் மசூதி வழக்கு 25 ஆண்டுகளாக இழுத்தடிக்கப் படுகிறது. இதுவே மிகப்பெரிய அநீதி. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை புதுப் பிக்க வேண்டும்’’ என்று தெரிவி த்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும் அத்வானி உள்ளிட்ட விவிஐபிக்கள் மீதான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளை ஒரே இடமாக லக்னோ நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அத்வானி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் கூறிய போது, ‘‘கடந்த 1992 முதல் சுமார் 25 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எனவே இந்த வழக்கை நாள் தோறும் விசாரித்து 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டியது அவசியம்’’ என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.