

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் இன்று (சனிக்கிழமை) நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் போராட்டத்தை கைவிடுமாறு மற்ற விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் உட்படப் பல்வேறு கோரிகைகளுக்காக மார்ச் 14 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பிலான போராட்டத்திற்கு அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார்.
இவர்கள் ஆரம்ப நாள் முதலாகவே பல்வேறு வித்தியாசமான வகைகளில் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாதி மொட்டை, பாதி மீசை, பாடை கட்டி போராட்டம், ஒப்பாரி, எலிக்கறி, பாம்பு கறி மற்றும் மண்சோறு உண்பது, சாட்டையடி வாங்குவது உட்படப் பலவகைகளில் இதை செய்து வந்தனர்.
இதன் உச்சகட்டமாக பிரதமர் அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர்களில் மூன்று பேர் தம் ஆடைகளை களைந்தும் நிர்வாணப் போராட்டமும் நடத்தினர். இதனால், தமிழக விவசாயிகளுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாகவும் சமூக இணையதளங்கள் உட்பட பல்வேறு தரப்பில் கண்டனங்களும், வருத்தங்களும் கிளம்பி இருந்தன.
இந்த வரிசையில், தற்போது விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்தைக் கைவிடுமாறு பலரும் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு தமிழகத்தின் மற்ற விவசாய சங்கங்கள் பலவும் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்துள்ளன.
இது குறித்து 'தி இந்து'விடம் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது:
கே.வி.இளங்கீரன், தலைவர், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு: டெல்லியில் பல்வேறு வகைப் போராட்டங்கள் அவசியமானது. இதற்காக விவசாயிகள் பலரும் தம்மையே வருத்திக் கொண்டு பலவகையானப் போராட்டங்கள் செய்தனர். இதில் அய்யாகண்ணு நடத்திய நிர்வாணப் போராட்டம் எங்களில் பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுபோல் இனி செய்ய வேண்டாம் என அவரிடம் நேரில் அறிவுறுத்தி, ஆதரவளித்து வந்தோம். இந்த போராட்டத்தில் யுக்திகள் யாருடைய மனமும் புண்படாத வகையில் இருத்தல் வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு அவமானம் தரக்கூடிய வகையிலானப் போராட்டங்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு சிறுநீர் அருந்துவதாக தம்மை தாழ்த்தி போராட்டம் செய்யக் கூடாது. இதுவரை நடத்திய போராட்டங்களுக்கு மனம் இறங்காத மத்திய அரசு இதற்கு மட்டும் இணங்கி வரும் எனக் கூற முடியாது. இந்த போராட்டம் எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளது.
ஆறுபாதி கல்யாணம், பொதுச்செயலாளர், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு:
இதுபோன்ற தரம் தாழ்ந்த போராட்டங்களை செய்ய வேண்டாம் என அய்யாகண்ணு அவர்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறோம்.
வித்தியாசமானப் போராட்டம் செய்ய வேண்டும் எனில், டெல்லியின் சாலைகள் மற்றும் பூங்காக்களை சுத்தப்படுத்தலாம். மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீடுகளில் உள்ள செடி, கொடிகளின் களை அகற்றி வளப்படுத்தலாம்.
டெல்லியில் நடத்தப்பட்ட நிர்வாணப்போராட்டம் உச்சகட்டமானதாக உள்ள நிலையில், சிறுநீர் குடிப்பது போன்றவை தேவை இல்லாதது. அய்யாக்கண்ணு போராட்டத்தை தமிழக விவசாயிகள் அனைவரும் மதித்து ஆதரவளிக்கின்றனர். எங்கள் கோரிக்கைகளை தீர்க்க பிரதமர் நரேந்தர மோடி உடனடியாக விவசாயிகளை சந்திப்பது அவசியம் ஆகும்.
காவேரி பி.ஆர்.பாண்டியன், தலைவர் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்: நிர்வாணமும், சிறுநீர் குடிப்பதும் போராட்ட வரைமுறைகளுக்கு மாறானது. போராட்டம் நடத்துபவர்கள் அதற்கான சில வழிமுறைகள் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
இந்த சிறுநீர் போராட்டத்தால் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த சூழலில் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களால் தமிழக நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுகிறது. இதை செய்யாதீர்கள் என கடந்த இருநாட்களாக அய்யாக்கண்ணுவிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்து விட்டேன். இதுபோன்ற போராட்டங்களால் அரசின் கவனத்தை கவருவது என்பது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு அனைத்து விவசாயிகளையும் பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபோன்ற முகம் சுளிக்க வைக்கும் போராட்டங்களை செய்ய நிர்பந்தப்படுத்தி விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.
இதற்கிடையே, கடந்த 19 ஆம் தேதி மாலை மத்திய தரைவழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அதில் நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி இருநாட்களுக்காக போராட்டத்தில் அமைதி காப்பது என முடிவானது. இந்த இருநாட்கள் நேற்றுடன் முடிந்து அமைச்சரின் பேச்சுவார்த்தையால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் 40 ஆவது நாளான இன்று மீண்டும் போராடத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவளித்து சென்றுள்ளனர். இவர்களுடன் வட மாநிலங்களின் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் தம் ஆதரவை நேரில் வந்து அளித்துள்ளனர்.