

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி (19). சிறுவயதிலே தந்தையை இழந்த இவர் வங்கியில் கடன் வாங்கி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் ஹூமர் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தார்.
கடந்த மே மாதம் 9-ம் தேதி அக்கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவிகள் சிலர் அஸ்வதியின் வாயில் பினாயிலை ஊற்றி ராகிங் செய்துள்ளனர்.
இதனால் குடல் வெந்த நிலையில் அஸ்வதி கேரளாவில் உள்ள கோழிக்கோடு அரசு மருத் துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான முகமது ஷபி அஸ்வதியின் குடும்பத்தினருடன் இணைந்து கோழிக்கோடு போலீஸில் புகார் அளித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ஆகியோருக்கும் மனு அனுப்பினார்.
இதையடுத்து ராகிங் செய்த சீனியர் மாண விகள் 5 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் ஆவணங்களை குல்பர்கா போலீஸாருக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
இதையடுத்து அஸ்வதியை ராகிங் செய்த இறுதியாண்டு மாணவிகள் லக்ஷ்மி, அதிரா, கிருஷ்ண பிரியா உட்பட 5 மாணவிகளை குல்பர்கா போலீஸார் நேற்று கைது செய்தனர். இதில் 2 மாணவிகள் கேரளாவை சேர்ந்தவர்கள். இதற்கிடையே, தலித் மாணவி பாதிக்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி கேரள எஸ்சி/எஸ்டி ஆணையம் கர்நாடக அரசிடம் கோரியுள் ளது. இதே போல கேரள மகளிர் ஆணைய மும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக மகளிர் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.