

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி மாளவியா நகரில், ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்டல் இயங்கி வருகிறது. மருத்துவச் சிகிச்சைக்காக டெல்லிக்கு வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 5 மாடிகளைக் கொண்ட ஓட்டலின் தரை தளத்தில் இயங்கி வந்த உணவகத்தில் நேற்று காலை 8.50 மணியளவில் திடீரென தீப்பற்றியது. பின்னர் அருகில் இருந்த ‘மிகாசா இன்’ என்ற ஓட்டலுக்கும் தீ பரவியது.
தகவல் கிடைத்தவுடன் டெல்லி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், டெல்லி காவல் துறை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), விபத்து மற்றும் காயங்கள் சேவை அமைப்பு (கேட்ஸ்), ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற அவசர கால உதவி முகமைகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கின.
மீட்புப் பணியின் போது வெளிநாட்டினர் உட்பட 21 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் வெளிநாட்டினர் என்றும் 10 பேர் இந்தியர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
கீழே குதித்த மக்கள்: தீயில் இருந்து தப்பிக்க பலர் ஓட்டல் மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கையாக கீழே விழுபவர்களின் பாதிப்பைக் குறைப்பதற்காக தரையில் மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன.
குறுகிய சாலையில் அமைந்துள்ள ‘ஃபிளரிஷ் ஸ்டே’ ஓட்டலுக்கு படுக்கை மற்றும் காலை உணவு (பி அண்ட் பி) திட்டத்தின் கீழ் டெல்லி அரசு உரிமம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன்படி, 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஓட்டலில் 25 அறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஓட்டல் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழை பெற்றிருந்ததா என்பதையும் அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர். மேலும், ஓட்டலுக்கு உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது.
இதுகுறித்து ‘மிகாசா இன்’ ஓட்டல் சமையல்காரர் கேசர் சிங் கூறும்போது, ‘‘காலை 8:00 மணியளவில் மின்சார அடுப்பை ஆன் செய்ய முயன்ற போது, திடீரென தீப்பிழம்பு பரவியது. ஓட்டலில் தீப்பிடித்துவிட்டது என்று எனது உதவியாளரை எச்சரித்தேன். வெளியே வந்த போது, ஓட்டல் முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்டேன். நான் எப்படியோ உயிர் தப்பித்து விட்டேன்’’ என்றார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பிரதமரின் அலுவலக எக்ஸ் தளத்தில், ‘‘தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்’’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்கவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.இந்தத் துயரமான வேளையில் டெல்லி அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உறுதியாக நிற்கிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டினர் யார்?
ஓட்டலில் தீ பரவியது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் யார், யார் அவர்களுடைய விவரங்களைப் போலீஸார் சேகரித்து வருகின்றனர். அந்த விவரங்கள் கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்துக்கும், குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.