பெண்களை 14 நொடிகள் நோக்கினாலே சிறை: கேரள அதிகாரி பேச்சால் சர்ச்சை

பெண்களை 14 நொடிகள் நோக்கினாலே சிறை: கேரள அதிகாரி பேச்சால் சர்ச்சை

Published on

பெண்களை தேவையில்லாமல் 14 நொடிகள் உற்று நோக்கினாலே சிறையில் அடைப்பதற்கு சட்டம் உள்ளது என கேரள அரசு அதிகாரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இரு தினங்களுக்கு முன் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநில கலால்துறை ஆணையர் ரிஷிராஜ் சிங் பங்கேற்றார்.

அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், "குண்டர்கள், சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள கத்தி, மிளகாய்பொடி ஸ்பிரே ஆகியவற்றை பெண்கள் எப்போதும் தங்கள் கைப்பையில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் பெண்களை 14 நொடிகள் உற்று நோக்கினாலே அவர்களை பிடித்து சிறையில் அடைப்பதற்கு சட்டத்திலும் இடம் உள்ளது. பெண்கள் அந்த சட்டப் பிரிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

ரிஷிராஜ் சிங்கின் இந்தப் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "கலால் துறை அதிகாரியின் பேச்சு எரிச்சலூட்டும் வகையில் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சமூக ஊடகங்களிலும் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கேலியாக கருத்துகளை பரிமாறி வருகின்றனர். அதில் ஒருவர், "தொடர்ந்து 13 நொடிகள் வரை பெண்களை உற்று நோக்கி விட்டு திரும்பிக் கொண்டால் கைது செய்ய முடியாதா?" என்றும் மற்றொருவர், "சன் கிளாஸ் அணிந்து கொண்டு பார்த்தால் என்ன செய்ய முடியும்?" என்றும் கேலியாக சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

முந்தைய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னிதலாவுக்கு சல்யூட் அடிக்காத சர்ச்சையிலும் கடந்த ஆண்டு ரிஷிராஜ் சிங் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in