

கர்நாடகாவில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் தன்னைக் காப்பாற்றும்படி கதறி துடித்தபோது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அவரை வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பலை சேர்ந்தவர் அன்வர் அலி (16). நேற்று முன்தினம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அன்வர் அலி ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தன்னைக் காப்பாற்றும்படி கதறினார். ஆனால் பொதுமக்களோ காப்பாற்ற முன்வராமல் மொபைலில் அவரை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்வர் அலி, தன்னை புகைப்படம் எடுக்காமல் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும்படி அழுதுள்ளார். அப்பொழுதும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
பின்னர் 40 நிமிடங்கள் கழித்து அங்கு வந்த போலீஸார் அன்வர் அலியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காலதாமதமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதே அவர் உயிரிழக்க காரணம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
அண்மையில் மைசூருவில் நிகழ்ந்த சாலை விபத்திலும் காயமடைந்தவரைக் காப்பாற்ற முன்வராமல் மொபைலில் படம் பிடிப்பதிலேயே பொதுமக்கள் ஆர்வமாக இருந்ததால் அவரும் உயிரிழந்தார். கர்நாடகவில் தொடரும் இத்தகைய மனிதநேயமற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.