பெண் பயணியுடன் சில்லறை பிரச்சினை: ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த நடத்துநர்

பெண் பயணியுடன் சில்லறை பிரச்சினை: ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்த நடத்துநர்
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குருபூரைச் சேர்ந்தவர் தேவதாஸ் ஷெட்டி (42). இவர் மங்களூரு - சுப்ரமண்யா இடையே இயக்கப்படும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துநராக பணியாற்றினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களூரு வில் இருந்து சுப்ரமண்யா நோக்கி பேருந்து சென்றது. அலங்கார் அருகே பெண் பயணி ஒருவர் பேருந்தில் ஏறினார். பயணச்சீட்டு வழங்கிய போது, மீதி சில்லறையை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார்.

ராமகுஞ்சாவில் அப்பெண் இறங்கும் போது நடத்துநர் தேவதாஸிடம், தான் ரூ.500 கொடுத்ததாகவும், மீதி சில்லறையை தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு தேவதாஸ், ‘நீங்கள் 500 ரூபாய் தரவில்லை. 100 ரூபாய் தான் கொடுத்தீர் கள்’ எனக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பேருந்து, ராமகுஞ்சா காவல் நிலையத் துக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸார் இருவரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் பயணி, உடனடி யாக தனது சகோதரர்களை அழைத்து முறையிட்டுள்ளார். பெண் பயணியின் சகோதரர்கள் நடத்துநரிடம் இருந்து ரூ.500 வாங்கிக்கொண்டு, அவரை தாக்கவும் முயற்சித்துள்ளனர். இதை யடுத்து பேருந்து தாமதமாக சுப்ரமண்யா நோக்கி சென்று கொண்டிருந்தது. குக்கே சுப்ரமண்யா கோயிலை அடுத்துள்ள குமரதாரா ஆற்றுப் பாலத்துக்கு அருகே சென்ற போது நடத்துநர் தேவதாஸ் ஆற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும், பயணிகளும் சுப்ரமண்யா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் நடத்துநர் தேவதாஸ் ஷெட்டியை தேடும் பணியில் இறங்கினர்.

இதனிடையே போலீஸார் நடத்துநரின் பையை சோதித்தபோது, ‘‘சில்லறை பிரச்சினையால் எனது மானம் போய் விட்டது. இனி வாழ விரும்பவில்லை'' என எழுதப்பட்டிருந்தது. மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பல மணி நேரங்களாக தேடியும் நடத்துநரின் உடல் நேற்று மாலை வரை கண்டெடுக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in