

யூரி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை அவர் நாட்டின் பாதுகாப்புப் படைகள் குறித்து வானொலியில் பேசினார்.
அவர் கூறியதாவது:
அண்மையில் யூரி ராணுவ முகாம் மீது சில கோழைகள் தாக்குதல் நடத்தினர். அதில் 18 அஞ்சாநெஞ்சங்கள் வீர மரணமடைந்தன. இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறவிடாமல் நமது படையினர் முறியடிப்பனர் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களால் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது.
யூரி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்திய ராணுவம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நமது ராணுவம் செயலில் பதிலடி தருமே தவிர வாய் பேச்சில் அல்ல. அரசியல்வாதிகள் பேசலாம் ராணுவம் செயலில்தான் தனது வீரத்தை காட்டும். இந்திய ரானுவம் மீது நான் பெருமிதம் கொள்கிறேன்.
யூரி தாக்குதலால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக 11-ம் வகுப்பு பயிலும் ஹர்ஷவர்தன் என்ற மாணவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இத்தேசத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பதாகக் கூறினார்.
ஆனால் தனது கோபத்தை வெளிப்படுத்த ஹர்ஷவர்தன் தேர்வு செய்துள்ள பாதை நம் அனைவரையும் ஊக்குவிக்கக் கூடியது. இனி தினமும் கூடுதலாக 3 மணி நேரம் பாடம் படிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் ஒரு நல்ல குடிமகனாக நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என அவர் நம்புகிறார். இது நிச்சயம் அனைவரும் பின்பற்றக்கூடிய விஷயம்.
காஷ்மீர் மக்கள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் அமைதி நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பழங்களை பயிரிட்டிருந்த காஷ்மீர் விவசாயிகள் அவற்றை எப்படி சந்தைக்கு கொண்டு செல்வதென்ற அச்சத்தில் உள்ளனர்.
காஷ்மீர் மக்கள் நம் தேசத்துக்கு எதிராக செயல்படுபவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். அவர்கள் தொலைந்துபோன தங்கள் இயல்பு வாழ்க்கையை மீட்கவே விரும்புகின்றனர்.
காஷ்மீரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள குழந்தைகளின் கல்வி எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இத்தருணத்தில் அமைதியும், நல்லெண்ணமும், ஒற்றுமையுமே நமது பிரச்சினைகளை தீர்க்கவும் வளர்ச்சி பாதையில் செல்லவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காதி உடை வாங்குவீர்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் காதி ஆடைகளை வாங்குமாறு ஊக்குவித்தார். அவர் கூறும்போது, "மக்கள் கதர் ஆடைகளை வாங்க வேண்டும் என்பதை நான் எப்போதுமே வலியுறுத்துவேன். காந்தி ஜெயந்தியன்று கதர் ஆடைகளை வாங்கி இச்சிறு வணிகத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நாம் உதவுவோம்" என்றார்.