

ஊழல் இருவழிப்பாதை. இரண்டு கைகள் இணைந்தாலே ஓசை. லஞ்சமும் அப்படித்தான். ஒரு கை கொடுக்கும்போது, மற்றொரு கை பெற்றுக் கொள்கிறது. ஓசை இல்லாமல் கை மாறும் இந்தப் பணத்தால், நாட்டின் 'ஒட்டுமொத்த வளர்ச்சி' தனிநபர் ஆதாயம் என்ற சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாகிறது.
அடுக்கடுக்காக 'ஊழல்' செய்திகள் ஊடகங்களில் நிறையும்போது தேசத்தின் அடையாளம், சர்வதேச அரங்கில் விவாதப்பொருளாகிறது.
"அண்மைக்காலமாக 'ஊழல் ஒழிப்பு' கோஷம் நம் நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் கோஷமும் ஒரு வகையில் நன்மை பயக்கும், மக்களுக்கு தங்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறுகிறார், நமது பிரதமர் மன்மோகன் சிங்.
"ஊழல், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது, இதை போர்க்கால நடவடிக்கையில் ஒழிக்க வேண்டும்" என்று பரிந்துரைக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
"ஊழல் இருவழிப்பாதை" - இது நமது சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வாதம். லஞ்சம் வாங்குபவர்களைவிட அதைக் கொடுக்க முன்வருபவர்களைத் தடுப்பதே கடும் சவாலாக அமைந்துள்ளது என்று டெல்லியில் நடைபெற்ற இன்டர்போல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் அவர் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், லஞ்சம் வழங்க முன்வருபவரையும் தண்டிக்க வழிவகைச் செய்திருந்தாலும், இந்திய சட்டதிட்டங்கள் ஊழல் ஒழிப்பில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள சட்ட திட்டங்களுக்கு நிகராக வலிமையானதாக இருக்க வேண்டும் என்றும் ரஞ்சித் சின்ஹா கூறுகிறார்.
ஊழல் என்பது ஒருங்கிணைந்த குற்றமா? இது இருவழிப்பாதையா? சிபிஐ இயக்குநர் சொல்வதுபோல லஞ்சம் வாங்குபவர்களைவிட அதைக் கொடுக்க முன்வருபவர்களைத் தடுப்பதில்தான் சவால் நிறைந்திருக்கிறதா?
விவாதிக்கலாம் வாருங்கள்.