

முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ. 24 ஆயிரம் கோடி பணத்தில் 90 சதவீதத்தை திருப்பி அளித்தது தொடர்பாக “செபி” கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் உடனே அளிக்க வேண்டும் என்று சஹாரா குழும நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான “செபி” எந்த விவரங்களை கேட்டாலும் நாங்கள் ஆமோதிக்கும்வரை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். நாங்கள் மிகவும் கண்ணியமாகவும், தாரளமாகவும் நடந்துகொள்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கவில்லை. இனி உங்களை கண்டிக்கத்தான் வேண்டும்” என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜகதீஷ் சிங் கேகர் கொண்ட அமர்வு எச்சரிக்கை விடுத்தது.
சஹாரா குழுமத்தைச் சேர்ந்த சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் (எஸ்.ஐ.ஆர்.இ.சி.எல்). முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.24 ஆயிரம் கோடி பணத்தில் 90 சதவீதத்தை திருப்பி அளித்துவிட்டதாக கூறியது. இதற்கான நிதி ஆதாரங்களை செபி கேட்டபோது, அவற்றை வழங்க மறுத்துவிட்டது.