ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

புகழ்பெற்ற ஹாஜி அலி தர்கா வுக்குள் நுழைய பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படுவதாக மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. இங்கு பெண்கள் நுழைவதற்கு ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை நிர்வாகத்தினர் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாகியா சோமன் மற்றும் நூர்ஜகான் நியாஸ் ஆகிய பெண்கள் இருவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் இருவரும் கூறும்போது, ‘‘இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், இரு பாலினருக்கும் சம நீதி கூறப்பட்டுள்ளது. தர்காவுக்குள் செல்ல பெண்களுக்குத் தடை எதுவும் கூறப்படவில்லை. எனவே, தர்கா அறக்கட்டளையினரின் முடிவு அதற்கு எதிரானதாக உள்ளது’’ என்று தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில், ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்வதற்கு மகாராஷ்டிர அரசும் ஆதரவு தெரிவித்தது.

பொதுநலன் மனுவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கானடே மற்றும் ரேவதி மோகித் டேரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி முடித்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறும்போது, ‘‘தர்காவுக்குள் நுழையக் கூடாது என்று பெண் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 15, 19 மற்றும் 25-க்கும் எதிரானது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஆணோ, பெண்ணோ அவர் விரும்பும் மதத்தை பின்பற்ற முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்களுக்கு நிகராக பெண்களும் தர்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும். தர்காவுக்கு வரும் பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அறக்கட்டளை நிர்வாகத்தினரும் மகாராஷ்டிர அரசும் செய்து கொடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

அப்போது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவ தாக ஹாஜி அலி தர்கா அறக் கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதை யடுத்து, தங்களது உத்தரவை செயல்படுத்த 6 வாரம் இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, தர்கா அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயிப் மேமன் வாதிடுகையில், ‘‘சவுதி அரேபியாவில் மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. அவர்கள் பிரார்த்தனை செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்படுகிறது. நாங்கள் பெண்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவர்களது பாதுகாப்புக்காகவே சில விதிமுறைகளை வகுத்துள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in