

கோப்புப்படம்
புதுடெல்லி: அறிவார்ந்த தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள். எனவே 2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித், ஷார்ஜில் இமாமுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகள் உமர் காலித், ஷார்ஜில் இமாம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
டெல்லி திஹார் சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த் குமார், அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார். அவர் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவையும் இணைக்கும் கோழிக் கழுத்து பகுதியை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து துண்டிக்க வேண்டும் என்று ஷார்ஜில் இமாம் பேசினார். இதேபோல உமர் காலித்தும் வன்முறை, கலவரத்தை தூண்டும் வகையில் பேசி சமூக ஒற்றுமையை சீர்குலைத்தார். இருவரும் நாட்டின் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டனர். அறிவார்ந்த தீவிரவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். எனவே உமர் காலித், ஷார்ஜில் இமாமுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டார்.
முன்னதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் இதே கருத்தை முன்வைத்தார். அவர் கூறும்போது, “டெல்லி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
உமர் காலித், ஷார்ஜில் இமாம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தாவே கூறும்போது, “வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வைத்து டெல்லி போலீஸார் வாதிடுகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையின்போது திட்டமிட்டு கலவரம் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். சிஏஏ சட்டத்தை எதிர்த்து மட்டுமே உமரும் ஷார்ஜிலும் போராடினர். கலவரத்தில் இருவருக்கும் தொடர்பு கிடையாது. அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.