

சென்னை: ‘தவறு நடந்ததற்கான ஆதாரங்களுடன் என் மேஜையில் 3 துறைகளின் கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்பேன்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று, நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை, ஆத்தூர் தொகுதி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்போது, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், திமுக ஆட்சியில் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு இருப்பவர்களுக்கும் மீண்டும் வீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது, ஐ.பெரியசாமி, தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
அமைச்சர் ராஜ்மோகன்: என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். அமைச்சர்கள் பேசும்போது, தவறு நடந்திருக்கலாம் என்று ஒப்புக்கொள் கின்றனர். ஆதாரங்களை நாங்கள் காட்டும்போதே இப்படி பேசுகின்றனர்.
முதல்வர் ஆதாரங்களை வைத்திருக்கிறார். ஒருவேளை அவர் எடுத்துக் காட்டினால்... எதிர்க்கட்சியினர் நிலைமை கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.
முதல்வர் விஜய்: நான் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என்று கேட்கின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பாக, நிதியமைச்சர் பேசும்போது, 3 துறைகளை ஆய்வுசெய்து அது தொடர்பான கோப்புகள் என் மேஜையில் இருப்பதாகக் கூறினார். அவர் ஏதோ போகிற போக்கில் அதை கூறவில்லை.
உண்மையிலேயே எனது மேஜையில் உள்ளன. அத்தனையும் ப்ரூப் உடன் இருக்கிறது. ஓபன் பண்ண வச்சுராதீங்க. எதை எப்போ ஓபன் பண்ணனுமோ, அப்போ எல்லாமே கரெக்டா ஓபன் ஆகும்.
அமைச்சர் ரமேஷ்: அண்ணன்கள் எல்லோரும், பேசுங்கள் என்கின்றனர். முதல்வர் பேச ஆரம்பித்தார் என்றால், ஆதாரங்களைக் காட்ட ஆரம்பித்தார் என்றால் என்ன நடக்கும் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். (அப்போது திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.)
முதல்வர் விஜய்: மக்கள்கிட்ட எப்போ பேசணும், என்ன பேசணும், எப்படி பேசணும்னு எல்லாம் பேசிட்டுதான், அன்பா, ஆசையா எங்கள் எல்லோரையும் கொண்டுவந்து இங்கு உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்பதில்லை. இடைத் தேர்தல்லயாவது சிலபேருக்கு நல்லது நடக்கணும்.
ஐ.பெரியசாமி: நான் அன்பா ஆசையா பேசித்தான், 9 முறை வெற்றி பெற்றுள்ளேன். ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளேன்.
இரண்டு முறை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அந்த அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.