

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாநில காவல்துறை இயக்குநர் சிவதர் ரெட்டி முன்னிலையில் 20 நக்சலைட்கள் ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.
தெலங்கானாவில் நக்சலைட்களின் கொரில்லா படை தலைவராக செயல்பட்டு வந்த தேவா, கமாண்டர் படை செயலாளர் ராஜா ரெட்டி, இவரது மனைவி உள்ளிட்ட 20 நக்சலைட்கள் ஆயுதங்கள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப் பணத்துடன் தெலங்கானா மாநில காவல்துறை இயக்குநர் சிவதர் ரெட்டி முன்னிலையில் சரண் அடைந்தனர். அப்போது வெடிகுண்டுகள், பல்வேறு வகை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து டிஜிபி சிவதர் ரெட்டி கூறியதாவது: பிஎல்ஜிஏ நக்சலைட்கள் குழுவில் 400 பேர் இருந்தனர். தற்போது 66 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்களில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் சரண் அடைந்துள்ளனர்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உத்தரவின் பேரில், சரண் அடைந்த நக்சலைட்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. நக்சலைட்கள் அனைவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த இயக்கம் தேவைதானா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
சரண் அடைந்த நக்சலைட்களுக்கு ரூ.1.80 கோடி நிதி உதவி வழங்கப்படும். உடனடி உதவியாக அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதுவரை தெலங்கானாவில் 576 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். 17 பேர் மட்டுமே தலைமறைவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.