

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜர் கோயிலின் முகப்பு கோபுரம் மீது குடிபோதையில் ஏறிய நபரை போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி கீழே இறக்கினர்.
ஆந்திராவின் ஆன்மிக நகரமான திருப்பதியின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிந்தராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 50 அடி உயர ராஜ கோபுரமும், மிகப்பெரிய மதில் சுவர்களும் கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிலையில், இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் கோயிலை விட்டு வெளியே சென்றதும் நடை அடைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சுமார் 50 அடி உயர முகப்பு கோபுரத்தின் மீது ஒரு நபர் இருப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை கீழே இறங்கி வருமாறு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.
பிறகு போலீஸார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், தீயணைப்பு படையினர் என பலரும் ஒன்றுகூடி அவரை அழைத்தபோதும் அவர் கீழே வர மறுத்து விட்டார். மேலும் அந்த நபர் அங்கிருந்த கலசங்களை சேதப்படுத்த தொடங்கினார். இதையடுத்து தீயணைப்பு படையினர் கோபுரத்தின் மேலே சென்று கயிற்றை கட்டி அதன் மூலம் அந்த நபரை கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பெத்தமல்லா ரெட்டி காலனியை சேர்ந்த திருப்பதி என்பதும் மதுபோதையில் கோபுரம் மீது ஏறியதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக தேஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் திருப்பதி முன்னாள் எம்எல்ஏவுமான கருணாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.