

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின் கழக்கூட்டம் காவல் துறையினர் காரியவட்டத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒரு மாதமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த இந்த 2 பெண்களும், ஒரு பாலியல் கும்பலுக்காக வேலை செய்து வந்ததாக காவல்துறை கூறியுள்ளது. இந்த சோதனையின்போது, அந்த 2 வங்கதேசப் பெண்கள் தவிர, அங்கிருந்த மேலும் 6 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தனித்தனி வழக்குகள் இந்தக் குழுவினர் இந்த மாத தொடக்கத்தில் தங்களை ‘மருத்துவர்கள்' என்று பொய்யாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2 வங்கதேசப் பெண்கள் மீதும் சட்டவிரோதமாக தங்கியதற்கும், மற்றொன்று பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் என தனித்தனி வழக்குகள்
பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பா-வில் இருந்தும் 2 வங்கதேசப் பெண்களை காவல் துறை கைது செய்திருந்தது. போலி ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மாநிலத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.