

பசி... இந்த உலகில் சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருள் என்றாலும், அது மிகையாகாது. பசி என்று ஓர் உணர்வு இல்லாமல் போயிருந்தால், உலகம் இயங்கி இருக்குமா என்பதை ஊகிக்க முடியாது. ஜீவனத்திற்காக பிழைப்பைத் தேடிச் செல்லும் அடிதட்டு மக்கள் நம் நாட்டில் படும் அல்லல்களுக்கு அளவே இல்லை.
பரபரப்பான நம் அன்றாட வாழ்வில், நாம் செல்லும் வழியில் நடைபெறும் பாலங்கள், பெரிய கட்டடங்கள், ரயில் இருப்புப் பாதைகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியை செய்து கொண்டிருப்பவர்கள் பெரும்பாலானோர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்கள் மொழியோ நமக்கு அறிமுகம் இல்லை. அவர்கள் தோற்றம் நமக்கு புதிது. அதனாலேயோ என்னவோ அவர்கள் நாம் பார்த்தும் செல்லும் ஒரு 'காட்சிப் பொருள்' அவ்வளவாகவே இருக்கிறார்கள்.
அந்த முகங்களுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வலியும், வேதனையும் யாருக்கும் தெரிவதில்லை. இப்படி நவீன நாடோடிகளாக பிழைப்புத் தேடி மாநிலம், மாநிலமாக செல்லும் இவர்கள் பலருக்கு ரேஷன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை என ஏதும் இருப்பதில்லை என்பது இன்னும் வேதனை அளிக்கும் விஷயம்.
இவர்கள் எப்போது எங்கு பணியாற்றுவார்கள் என்பது இவர்களை ஒப்பந்தத்தில் எடுக்கும் ஒப்பந்த உரிமையாளருக்கு மட்டுமே தெரியும் என்பதால் இவர்களின் கோரிக்கைகளோ அரசியல்வாதிகளுக்கு பெரிதாக இருப்பதில்லை. ஏனெனில் இவர்கள் ஓட்டு நிச்சயம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. இவர்கள் குழந்தைகளும் எதிர்காலமோ இன்னும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பெற்றோர்கள் செல்லும் மாநிலங்களுக்குச் செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள் இரும்பு கம்பிகள், ஜல்லி கற்கள், மணல் குவியல்கள் மத்தியில் விளையாடிப் பொழுதை கழிக்கின்றனர். சற்று வளர்ந்த குழந்தைகள் கடைகளில் தினக் கூலியாகின்றனர். இவர்களுக்கு கல்வி ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இவர்கள் உரிமைக்காக தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒப்பந்தக்காரர்கள் கை ஓங்கி இருப்பதால் பல நேரங்களில் பணம் மட்டுமே பேசுகிறது, நியாயம் ஊமையாக்கப்பட்டு.
இடம் பெயர்ந்து வேலை பார்ப்பவர்களை பாதுகாக்க சட்ட திட்டங்கள் இருந்தாலும், அவை இம்மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. காரணம் இவர்களில் பலருக்கு அது குறித்த விழிப்புணர்வே இல்லை. தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என எதையும் தட்டிக்கேட்க திராணி இல்லாமல், உழைத்து அயர்ந்தவர்களுக்கு உரக்கம் மட்டுமே சொர்க்கமாகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒடிசாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் இருவரது கைகள் துண்டிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த ஒரு கொடூரம்... இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கின்றன யாருக்கும் தெரியாமலேயே.
இந்த ஒரு சம்பவம் உச்ச நீதிமன்றம் கவனத்திற்கு வந்ததால், நீதிபதிகள் தாமாகவே முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். (படிக்க ->தொழிலாளர் கைகள் துண்டிக்கப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்) பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்.
சமகால பரதேசிகளாகப் பிழைப்பைத் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைப்பது எப்போது?!
வேலை செய்வது மட்டும் இவர்கள் உரிமை அல்ல... வாழ்வுரிமையும் இவர்களுக்கு இருக்கிறது. இதனை சமூகம் உணர வேண்டும்.
பாரதி ஆனந்த் - தொடர்புக்கு bharathipttv@gmail.com