பெட்ரோல், டீசலை வீட்டிலேயே விநியோகம் செய்ய திட்டம்: மத்திய அரசு பரிசீலனை

பெட்ரோல், டீசலை வீட்டிலேயே விநியோகம் செய்ய திட்டம்: மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் அவர்கள் வீட்டிலேயே சென்று விநியோகம் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிக நேரம் காத்திருந்து நேர விரயம் செய்வதை தவிர்க்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாக அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஞாயிறு விடுமுறையில் அரசுக்கு உடன்பாடில்லை'

இதற்கிடையில், "ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களை மூடுவதாக ஒருசில பெட்ரோல் விற்பனையக உரிமையாளர்கள் எடுத்துள்ள முடிவில் அரசுக்கு எவ்வித உடன்பாடுமில்லை" என அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஸ்ரீநகரில் தெரிவித்தார்.

முன்னதாக மே மாதம் 14-ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாக இருக்கும் என தமிழ்நாடு, புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் சங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் எரிபொருள் சேமிப்பு குறித்து பேசியதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அந்த அமைப்புகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்ததால் அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக ஸ்ரீநகரில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களை மூடுவதாக ஒருசில பெட்ரோல் விற்பனையக உரிமையாளர்கள் எடுத்துள்ள முடிவில் அரசுக்கு எவ்வித உடன்பாடுமில்லை. எரிபொருள் சேமிப்பு குறித்த பிரதமரின் அறிவுரையை சிலர் தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவு இது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in