

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் 13-ம் நாளான நேற்று விவசாயி ஒருவருக்கு மாலை அணிவித்து அவரை இறந்தவர் போல் படுக்க வைத்தனர். பிறகு அவரைச் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்தனர்.
இந்த ஒப்பாரி போராட்டத்துக்கு இடையே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (25), அகிலன் (19) என்ற இளம் விவசாயிகள் இருவர் அருகில் உள்ள மரத்தில் ஏறினர். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இவர்களை கீழே இறங்கும்படி அங்குள்ள விவசாயிகள் கெஞ்சினர். இருவரும் கீழே விழுந்தால் பிடிப்பதற்கு நீண்ட தார்பாயை பிடித்தபடி நின்றனர். அதேசமயம், அங்கு வந்திருந்த நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரும் இருவரை யும் கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் விவசாயிகள் பிடிவாதம் காட்டியதால் அங்கு பரபரப்பு கூடியது.
இதற்குள் தகவல் அறிந்து, டெல்லி போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து அனைவரின் வேண்டுகோளை ஏற்று விவசாயிகள் கீழே இறங்கி வந்தனர். இதன்மூலம் சுமார் 1 மணி நேரம் அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
கடந்த 2015, ஏப்ரல் 22-ல் இதே பகுதியில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கஜேந்திரா சிங் என்ற ராஜஸ்தான் விவசாயி அங்குள்ள மரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியது.
ஜேட்லியுடன் விஷால் சந்திப்பு
இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர். விவசாயிகளுக்கு தங்களைப் போன்ற பிரபலங்களின் ஆதரவு உண்டு என்பதை அரசுக்கு உணர்த்தவே இந்த சந்திப்பு நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர். விவசாயிகளுக்கு தங்களைப் போன்ற பிரபலங்களின் ஆதரவு உண்டு என்பதை அரசுக்கு உணர்த்தவே இந்த சந்திப்பு நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இத்துடன் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க 114 பேருக்கு நடிகர் அமிதாப் பச்சன் ரூ.39 லட்சம் கொடுத்து உதவியது போல் ஒரு முயற்சியை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகர் விஷால் கூறும் போது, “விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்வது ஒருபுறம் உள்ளது. என்றாலும் பொதுமக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விவசாயி களுக்கு நிதி உதவி அளிக்கும்படி கேட்க உள்ளேன். இது தொடர்பாக தமிழகம் சென்று ஆலோசனை நடத்துவேன். அரசு நிவாரணம் கிடைப்பதற்குள் எத்தனை விவசாயிகள் மடிவார்கள் எனத் தெரிய வில்லை. விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
இந்நிலையில் உ.பி., ராஜஸ்தான் மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று தமிழக விவசாயிகளை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் நாளை (மார்ச் 27) தாங்களும் பங்கேற்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.