

பிஹார் மாநிலத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியரிடம் உள்ளூர் ‘செய்திச் சேனல்’கள் பேட்டிகண்டு ஒளிபரப்பின. ரூபி குமாரி என்ற மாணவி 12-ம் வகுப்பு கலை பாடப்பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
பேட்டியின் போது, அவரிடம் அரசியல் அறிவியல் பாடம் குறித்து கேட்கப்பட்டது. ‘அது, சமையல் கலை சம்பந்தப்பட்டது’ என மாணவி பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பதை, ‘புரோடிக்கல் சயின்ஸ்’ என உச்சரித்தார்.
அதோடு, என்னென்ன பாடங் கள் தனது பாடப்பிரிவில் வரு கின்றன என்பதையும் அவரால் முழுமையாக கூறமுடியவில்லை. மொத்த மதிப்பெண், 500 என்பதற்கு பதிலாக, 600 எனக் கூறினார்.
அதேபோல், 12-ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் மாநிலத் தில் முதலிடம் பிடித்த சவுரப் ஸ்ரேஸ்த் என்ற மாணவனுக்கு, ‘ஹெச்டூஓ’ எனப்படும் நீரின் வேதியியல் பெயரை விளக்கத் தெரியவில்லை. மேலும் பல அடிப் படை கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
ஆனால், வழக்கம்போல இவ்விருவரும் ஐஏஎஸ் ஆவதே தங்கள் லட்சியம் எனக் கூறினர். இந்த இருவரும் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ‘ஜூனியர் காலேஜ்’ மாணாக்கர்கள்.
இவ்விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலை யில், 12-வகுப்பு அறிவியல், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஜூன் 3-ம் தேதி (நாளை) நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும் என பிஹார் பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
‘பள்ளி தேர்வுக் கமிட்டி சார்பில் சிறப்புக் குழுவினர் மாணவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். அதில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என, பிஹார் பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங் தெரிவித்தார்.
பிஹாரில் ‘கல்வி மாஃபியா’க் கள் கொடிகட்டிப் பறக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை முதல் தேர்ச்சி வரை மாணவர் களுக்கு தேவையான அனைத்தை யும் பணத்துக்காக செய்துமுடிக் கும் வேலையை அவர்கள் செய்கின்றனர்.
கடந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, நூற்றுக் கான பேர், பள்ளி கட்டிடங்களின் மீதேறி, தேர்வு எழுதிக்கொண் டிருந்த மாணவர்களுக்கு ஜன்னல் வழியே ‘பிட் பேப்பர்’ வீசிய புகைப்படங்கள், சர்வதேச அளவில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டன. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பெரியவர்களுக்கு, 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.