

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ரூ.25,000-க்கு பதிலாக ரூ.30,000 ஓய்வூதியமாக அவர்களுக்கு கிடைக்கும்.
சுதந்திர போராட்டத்தில் பழங் குடியினர்களும் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர். அவர்களது தியாகங்களை வெளி உலகத் துக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் அருங் காட்சியகம் அமைக்கப்படும். இதே போல் ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்க வசதியாக வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்’’ என்றார்.
தூங்கி வழிந்த கேஜ்ரிவால்
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தான் இதுவரை நீண்ட நேரம் சுதந்திர தினத்துக்காக உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி 93 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றி, அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அதே சமயம் விழாவில் பங் கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் உறங்கி வழிந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.