

நாட்டில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரப்படி இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உறுதி செய்தது. இதனால் நாட்டில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவாக 68 பேர் உள்ளனர். இதையடுத்து மகராஷ்டிராவில் 41, ம.பி.யில் 38, பிஹாரில் 30, கர்நாடகாவில் 22, கேரளாவில் 16, சத்தீஸ்கரில் 15, டெல்லியில் 9, மேற்கு வங்கத்தில் 6, தமிழகத்தில் 3 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். அருணாச்சலபிரதேசம், கோவா, இமாச்சலபிரதேசம், மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம் ஆகிய 8 மாநிலங்களில் தூக்கு தண்டனை கைதிகள் ஒருவர் கூட இல்லை. இதேபோல், புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, டையூ டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தூக்கு தண்டனை கைதிகள் எவரும் இல்லை.
இதற்கிடையே நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற 4 கைதிகளில் அக்ஷய் தாக்கூர், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 3 பேரும் டெல்லி திஹார் சிறையில் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மரண தண்டனை பெற்றவர்களுக்கு சிறையில் சக கைதிகள் ஆறுதல் கூறி தேற்றுவது வழக்கம். ஆனால் தீர்ப்பு வெளியானது முதல் உணவு எடுத்துக்கொள்ளாமல் அழுத இவர்களை தேற்றுவதற்கு சக கைதிகள் முன்வரவில்லை. தீர்ப்பின்போது, திஹார் சிறையின் பொது அரங்கின் தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த இவர்களால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. எனினும், முக்கியக் குற்றவாளியான முகேஷ்சிங் மட்டும் இறுக்கமான முகத்துடன் இருந்து வருகிறார். தனது மரண தண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என அவர் நன்கு உணர்ந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இவர்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறார் குற்றவாளி தனது மூன்று வருட தண்டனையை முடித்து விட்டார். கடந்த 2015-ல் டெல்லி சீர்திருத்தப் பள்ளியில் தண்டனையை முடித்த இவர், தென் மாநிலம் ஒன்றில் வசித்து வருகிறார். தனது பெயருடன் அடையாளத்தையும் மாற்றிக் கொண்ட இந்த இளைஞர் அங்கு சமையல்வேலை செய்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. நிர்பயா வழக்கில் ராம்சிங் என்பவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் நடந்த 2012, டிசம்பர் 16-ல் ராம்சிங்கிடம் தனது ஊதியத்தை பெறுவதற்காக பேருந்துக்கு சென்ற இச்சிறுவன் குற்றம் செய்யத் துணிந்தார்.