பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழர் வெற்றி: குடிசைப் பகுதிகளை முன்னேற்ற உறுதி

பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழர் வெற்றி: குடிசைப் பகுதிகளை முன்னேற்ற உறுதி
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த 15-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடை பெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான சையோன் கோலிவாடா தொகுதியின் பாஜக வேட்பாளரான தமிழ்ச்செல்வன் 40,869 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சிவசேனா வேட்பாளர் சதம்கர் மங்கேஷ் தரைவிட 3,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

‘தி இந்து’வுக்கு தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி:

இந்த வெற்றி நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதானா?

நிச்சயமாக இது நான் எதிர்பார்த்த வெற்றிதான். பிரதமர் நரேந்திர மோடி மீது பொது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையுள்ளது. கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கு ஏற்ப எல்லோர் நலனுக்காகவும் பாடுபட்டேன். இந்த உழைப்புக்கான அங்கீகாரம் இப்போது என்னை எம்.எல்.ஏ ஆக்கியுள்ளது.

மராட்டிய மண்ணில் சிவசேனா வேட்பாளரை வீழ்த்துவது எப்படி சாத்தியமானது?

எனது தொகுதியில் 1 லட்சம் மராட்டியர்கள் உள்ளனர். இதைத்தவிர தமிழர், சீக்கியர் என்று பிற மாநிலத்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு என்னை நன் றாகத் தெரியும். மற்ற கட்சிப் பிரமுகர்களை விட என்னை பொதுமக்கள் எளிதாக அணுக முடியும். அதுதான் என்னை வெற்றி பெற வைத்துள்ளது. மேலும் பாஜகவினர் மற்றும் தமிழகத்திலிருந்து வந்திருந்து களப்பணியாற்றிய எனது ஆதரவாளர்களின் உழைப்பும் இந்த வெற்றிக்கு காரணம்.

ஒரு எம்.எல்.ஏ.வாக தொகுதியின் எந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப் போகிறீர்கள்?

இங்குள்ள குடிசைப் பகுதிகள் முன்னேறாமல் உள்ளன. கோலிவாடா பகுதியில் கல்வி வாய்ப்பு களும் குறைவாகவே உள்ளன. எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதுதான் எனது முதல் கடமை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in