மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், கட்சியின் சட்டபேரவைத் தலைவராக ஃபட்னாவிஸ் முறைப்படி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகிறார் ஃபட்னாவிஸ்.

இதனையடுத்து, இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவிக்காக கோரவுள்ளார். 44 வயதாகும் ஃபட்னாவிஸ் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபட்னாவிஸின் வெற்றிப் பாதை

நாக்பூரில் இளம் வயதிலேயே மேயர் பதவி வகித்த ஃபட்னாவிஸ் பிறகு அரசியலில் முன்னேற்றம் கண்டு மகாராஷ்டிர முதல்வராக இன்று தேர்வு செய்யப்பட்டார்.

சிவசேனாவின் மனோகர் ஜோஷிக்குப் பிறகு மகாராஷ்டிர முதல்வர் பதவி வகிக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் ஃபட்னாவிஸ்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரத்தில் பாஜக-வின் வெற்றிக்கு வித்திட்டதில் பெரும் பங்கு வகித்த ஃபட்னாவிஸ், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இவரை பிரதமர் நரேந்திர மோடி, “தேவேந்திர ஃபட்னாவிஸ், நாட்டிற்கு நாக்பூர் அளித்த பரிசு” என்றார். சட்டப்பேரவைத் தேர்தலை ஃபட்னாவிஸ் கையாண்ட விதத்திற்காக அவர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரினால் பாராட்டப் பெற்றார்.

ஜனசங்க மற்றும் பாஜக தலைவராக இருந்த, மறைந்த தலைவர் கங்காதர் ஃபட்னாவிஸின் மகன் தேவேந்திர ஃபட்னாவிஸ். கங்காதர் ஃபட்னாவிஸைத் தன் அரசியல் குரு என்று ஒருமுறை நிதின் கட்கரி கூறியிருந்தார்.

1989-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இளம் வயதிலேயே ஃபட்னாவிஸ் இணைந்தார். 1997-ஆம் ஆண்டு தனது 27-வது வயதில் நாக்பூர் மேயர் பதவியைப் பெற்று இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிறகு 1,999-ஆம் ஆண்டு முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 3 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். தனி விதர்பா மாநிலத்தை இவர் ஆதரித்தார்.

விதர்பாவை தனி மாநிலமாகப் பிரிப்பதை பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா எதிர்த்தது. அப்போது ஒரு கூட்டத்தில் ஃபட்னாவிஸ் மிகக் கோபமாக, சிவசேனை எம்.எல்.ஏ.க்களை நோக்கி ‘விதர்பாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சிவசேனா மாநிலத்தை பாஜக துண்டாடிவிடும் என்று பிரச்சாரம் மேற்கொண்டதையடுத்து தனி மாநில கோரிக்கையை அவர் கைவிட்டதாகத் தெரிகிறது.

சட்டத்தில் பட்டப்படிப்பும், வர்த்தக மேலாண்மைப் பட்டப்படிப்பும் கொண்டுள்ள ஃபட்னாவிஸ் பொருளாதாரம் பற்றி 2 நூல்களை எழுதியுள்ளார்.

நிர்வாக அனுபவம் இவருக்கு இல்லை என்று நிதின் கட்கரியை முதல்வராக்க வேண்டும் என்று கட்கரி ஆதரவாளர்கள் கருதினர். ஆனால் மோடி மற்றும் அமித் ஷா-வின் ஆதரவு ஃபட்னாவிஸ் பக்கம் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in