

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நீண்ட கால பலன் தரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, "நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அவர் குறிப்பிடும்போது, "பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவு மட்டுமே. விரைவில் இயல்பு நிலை திரும்புவதோடு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது இன்னும் கூடுதல் தூய்மையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
பணமதிப்பு நீக்கம் நீண்ட கால பலனைத் தரும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கும். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
பல காலமாக நடந்துவந்த வரி ஏய்ப்பை பண மதிப்பு நீக்கம் தடுத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஊழல் குறைந்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்திருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் எதிர்விளைவுகள் அடுத்த ஆண்டுகளில் இருக்காது" என்றார்.
மேலும், "உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக 9-வது இடத்தில் இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வியத்தகு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது" என்று ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.