மேலிடத்துக்காக இளம்பெண்ணை வேவு பார்த்தார் குஜராத் அமைச்சர்

மேலிடத்துக்காக இளம்பெண்ணை வேவு பார்த்தார் குஜராத் அமைச்சர்
Updated on
2 min read

மேலிட உத்தரவின்பேரில் காவல் துறை உதவியுடன் பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண்ணை குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா, வேவு பார்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோப்ரா போஸ்ட், குலைல் ஆகிய புலனாய்வு இணையதளங்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன.

குஜராத் முதல்வரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் அமித் ஷா. போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.ஜிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை, விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்துள்ளனர். வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்க்க அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அடிக்கடி அகமதாபாத் வந்து சென்றுள்ளார்.

2005-ம் ஆண்டில் குஜராத்தின் பாவ்நகர் மாநகராட்சி விழாவில் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தப் பெண்ணும் சந்தித்ததாக கோப்ரா போஸ்ட் இணையதளம் கூறுகிறது.

இதற்கு ஆதாரமாக அமித் ஷாவுக்கும் ஷிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில் பெரும்பாலான இடங்களில், மேலிட உத்தரவின்பேரில் இந்த உளவுப் பணி நடைபெறுவதாக போலீஸ் அதிகாரியிடம் அமித் ஷா கூறுகிறார்.

பெண்ணின் தந்தை அறிக்கை

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்தப் பெண்ணின் தந்தை அவசரமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றபோது பெங்களூரில் வசிக்கும் என் மகள் அகமதாபாத் வந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் மருத்துவமனைக்கும் இடையே இரவு நேரங்களில்கூட சென்று வந்தார்.

முதல்வர் நரேந்திர மோடி எங்களின் குடும்ப நண்பர். எனவே, எனது மகளை கவனித்துக் கொள்ளும்படி அவரை கேட்டுக் கொண்டேன். இணையதளங்களில் இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் உள்நோக்கம் கொண்டவை என்று அந்தப் பெண்ணின் தந்தை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் தந்தையே விளக்கம் அளித்துவிட்டார் என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் சார்பில் டெல்லியில் வெள்ளிக்கிழமை சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் அமித் ஷா, சிங்கால் ஆகியோர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்பட்டன.

பேட்டியின்போது சமூக சேவகர் அருணா ராய், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கடற்படை முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அந்த மேலிடம் யார்?

அமித் ஷா குறிப்பிடும் அந்த மேலிடம் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறியது:

அந்தப் பெண்ணின் மீது மேலிடத்துக்கு அப்படி என்ன ஈர்ப்பு? ஏன் அந்தப் பெண்ணை வேவு பார்த்தார்கள்? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாக ஒரு தனிநபரின் தனிப்பட்ட விவகாரங்களை வேவு பார்த்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in