

புதுடெல்லி: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 18 இந்திய எண்ணெய் கப்பல்கள் சிக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் ராணுவம் முழுமையாக மூடி உள்ளது. பொதுவாக இந்த ஜலசந்தி வழியாக தினமும் 140 சரக்கு கப்பல்கள் கடந்து செல்வது வழக்கம். தற்போது ஈரான் ராணுவம் அனுமதிக்கும் சில கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்கின்றன. இதனால் ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் காஸ் போக்குவரத்தில் 85% முடங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 18 இந்திய எண்ணெய் கப்பல்கள் சிக்கி உள்ளன. இதில் 3 கப்பல்களில் சமையல் காஸ் உள்ளது. 18 கப்பல்களில் 485 மாலுமிகள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
இவை தவிர இந்திய துறைமுகங்களுக்கு வர வேண்டிய 10 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்ளன. இரு இந்திய எண்ணெய் கப்பல்கள் அண்மையில் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல்களில் 94,000 டன் சமையல் காஸ் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கோலாவில் இருந்து எல்பிஜி மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அங்கோலாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிடம் இருந்து எல்பிஜி, எல்என்ஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அங்கோலாவின் உதவியை நாடி உள்ளோம்.
அந்த நாட்டிடம் இருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஓராண்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, அல்கேரியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.