

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
கிருஷ்ணா மாவட்டம் விஜய வாடா அடுத்துள்ள நிம்மலூருவில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) நிறுவனத்தின், ராணுவத் தேவை களுக்கான கண்காணிப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய தகவல் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர்தான் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது. பிரதமரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுபவர்கள். மாநில பிரிவினையால் பெரு நஷ்டம் அடைந்துள்ள ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரவே இங்கு பல தொழிற்சாலை கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில், ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்குப் பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது அடிக்கல் நாட்டப் பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், இரவு நேரத் தில் கூட சுமார் 3 கிமீ தூரத்தை கண்காணிக்க உதவும் லென்ஸ் தயாரிக்கப்பட உள்ளது. இங்கு உற்பத்தி ஆகும் பொருட்களில் 87 சதவீதம் நாட்டின் பாதுக்காப்புக்கு தொடர்புடையதாகும்.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து மட்டுமே வேண்டுமென நான் உட்பட பலர் ஆசைப்பட்டது உண்மை. ஆனால், ஆந்திராவின் 28 கோரிக்கைகளில் சிறப்பு அந்தஸ்தைத் தவிர, மற்ற 27 கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடு மிகவும் பலவீனமடைந்து விட்டது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.