

உத்தரப் பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக பள்ளிப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 குழந்தைகளும் பஸ் டிரைவரும் இறந்தனர். மேலும் 35 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டம், அலிகஞ்ச் என்ற இடத்தில் ஜே.எஸ்.வித்யாநிகேதன் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று காலை சுற்றுப்புற பகுதி மாணவர்களுடன் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசாத்நகர் என்ற கிராமத்தில் இந்த பேருந்தும் எதிரில் வேகமாக வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 12 மாணவர் களும் பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தனர். மேலும் 35 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடும் பனி மூட்டமே விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. கடும் குளிர் காரணமாக எட்டா மாவட்டத்தில் இன்று வரை 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதை மீறி அந்தப் பள்ளி இயங்கியுள்ளது. இதையடுத்து பள்ளியின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் பள்ளிக் குழந்தை கள் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.