

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் நடை பெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 8-ம் தேதி நிறைவடைகிறது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா மாநில சட்டசபையின் பதவிக் காலம் அக்டோபர் 27-ம் தேதி முடிகிறது.
இந்நிலையில், இரு மாநிலங் களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் டெல்லியில் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதுகுறித்து நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
ஹரியாணா, மகாராஷ்டிர மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்படும். 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும்.
29-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 1-ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும்.
காஷ்மீர், டெல்லி தேர்தல் எப்போது?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அங்கு இயல்பு நிலை திரும்பிய பிறகு அந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும். டெல்லி சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அது எங்களின் அதிகார வரம்பில் இல்லை.
இவ்வாறு வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.
இரு மாநில சட்டசபைத் தேர்தலுடன் மகாராஷ்டிரத்தின் பீட் மக்களவைத் தொகுதி, ஒடிஷாவின் கந்தமால் மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
டிசம்பரில் ஜார்க்கண்ட் தேர்தல்?
காஷ்மீர் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 19-ம் தேதியும் ஜார்க்கண்ட் சட்டசபை யின் பதவிக் காலம் ஜனவரி 3-ம் தேதியும் முடிவடை கிறது. அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்பட்டது.
ஜார்க்கண்டில் பாதுகாப்பு, காஷ்மீரில் வெள்ள பாதிப்பு காரணங்களுக்காக இந்த இரு மாநிலங்களின் தேர்தலை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரியில் நடத்த ஆணையம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது.
தற்போது காஷ்மீரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப் பதால் அந்த மாநிலத்தில் உடனடியாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர நிலவரம்
மகாராஷ்டிர சட்டசபையில் காங்கிரஸுக்கு 82 உறுப்பினர் களும் தேசியவாத காங்கிரஸுக்கு 62 உறுப்பினர்களும் உள்ளனர். பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 90 உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தின் 48 தொகுதி களில் பாஜக 23 இடங்களையும் சிவசேனா 18 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
ஹரியாணா நிலவரம்
ஹரியாணா சட்டசபையில் காங்கிரஸுக்கு 40 உறுப்பினர் களும் இந்திய தேசிய லோக் தளத்துக்கு 31 உறுப்பினர்களும் உள்ளனர். பாஜகவுக்கு 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் 10 தொகுதிகளில் பாஜக 7 இடங்களையும் இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸுக்கு ஓர் இடம் மட்டுமே கிடைத்தது.
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத். உடன் தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, சையது அகமது ஜைதி. படம்: பிடிஐ
நோட்டா வசதியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியதாவது:
வேட்பு மனுவில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதியும் இருக்கும் என்று தெரிவித்தார்.