

பெங்களூருவில் 45 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்ய அதனைக் கதறியபடியே செல்போனில் மகள் வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது நபர் அவருடைய மனைவி, மகனைக் கொலை செய்துள்ளார். முதலில் தனது 38 வயது மனைவியைக் கொன்றவர். பின்னர் தனது 12 வயது மகனை அவரது கழுத்தில் போர்வையைச் சுற்றி இறுக்கிக் கொலை செய்துள்ளார். அந்தச் சிறுவனும் எவ்வித ஓசையும் எழுப்பாமல் இறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அவரது 17 வயது மகள் கதறியபடியே இதை செல்போனில் பதிவு செய்துள்ளார்.
வடக்கு டெல்லியில் புராரி எனும் பகுதியில் கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இந்தச் சம்பவமும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடந்த கொடூரம் குறித்து 17 வயது இளம் பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு காவலர்கள் வந்துள்ளனர்.
போலீஸாரிடம் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு 45 வயதாகிறது. நான் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம். என் மனைவி, மகனைக் கொலை செய்தேன். ஆனால், என் மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்" என்றார்.
போலீஸார் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.