2014-ம் ஆண்டைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

2014-ம் ஆண்டைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
Updated on
1 min read

2014-ம் ஆண்டைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக வென்று ஆட்சியை 2-வது முறையாகக் கைப்பற்றும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிவித்துவிட்டோம். அதேபோல எதிர்க்கட்சிகள் தரப்பில் அடுத்த பிரதமர் யார் என்பதைக்கூற முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு எதிர்க்கட்சிகள் இருட்டறையில் பிரதமர் வேட்பாளரை வைத்திருப்பார்கள்.

2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மீது வைத்திருந்த அதே நம்பிக்கையை மக்கள் இப்போதும் வைத்துள்ளார்கள். கடந்த முறை மோடியா, மன்மோகன் சிங்கா, சோனியாவா என்ற போட்டி நிலவியது. ஆனால், இப்போது மோடிக்கு எதிராக ஒருவரும் இல்லை. யாரென்றும் தெரியவில்லை.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் பெற்ற இடங்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும். மூன்றில் இருபங்கு இடங்களைக் கைப்பற்றி 2-வது முறையாக ஆட்சி அமைப்போம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடி குறித்து நீச் ஆத்மி என்று கூறியதை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். இதற்கு அந்தக் கட்சி என்ன பதில் அளிக்கப்போகிறது. நான் மோடி குறித்துக் கூறியது உண்மைதான் என்று மணிசங்கர் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும்''.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in