

பிஹார் மாநிலம் தர்பங்காவில், பெண் குழந்தை பெற்றதற்காக மூன்று வருடங்களாக தன் மனைவியை குளியலறையில் அடைத்து வைத்ததாக அவரின் கணவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பாட்னாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தர்பங்கா நகரின் ராம்பாக் காலனியில் வசிப்பவர் பிரபாத்குமார் சிங். இவருக்கு கடந்த 2010-ல் அருகிலுள்ள பட்ஸான் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததால், மிகவும் கோபமான பிரபாத்குமாரின் வீட்டார், அப்பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெண் வீட்டார் வரதட்சணை தரமறுக்கவே, தன் மனைவியை பாத்ரூமில் கடந்த மூன்று வருடங்களாக பிரபாத் குமார் அடைத்து வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை ஷியாம் சுந்தர், போலீஸில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் தர்பங்கா மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீமா குமாரி கூறும்போது, “கடந்த மூன்று வருடங்களாக குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பெண்ணின் நகங்கள் நீளமாகவும், சரியாக பராமரிக்கப்படாத கூந்தலுடனும் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார். அவரை அவரது மூன்று வயது குழந்தைக்கு அடையாளம் தெரியவில்லை.’ எனக் கூறினார்.
இது குறித்து பிரபாத் குமாரின் வீட்டார் கூறும்போது, ‘எங்கள் வீட்டில் உள்ள ஒரே ஒரு குளியலறையில் அந்தப் பெண்ணை அடைத்து விட்டு நாங்கள் அதை எப்படிப் பயன்படுத்தியிருக்க முடியும். பெண்ணின் தந்தை ஷியாம் சுந்தர், நன்கு படித்த அழகான தனது மூத்த பெண்ணை எங்களுக்குக் காட்டி விட்டு படிக்காத அழகு குறைந்த இளைய பெண்ணை மணமுடித்து ஏமாற்றி விட்டார்’ என்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.