மகாராஷ்டிரா, ஹரியாணாவில் அக்டோபரில் தேர்தல்

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் அக்டோபரில் தேர்தல்
Updated on
1 min read

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் அக்டோபர் மூன்றாவது வாரம் சட்டசபை தேர்தல் நடை பெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 288 உறுப்பினர்கள் பலம் கொண்ட மகாராஷ்டிர சட்ட சபையின் பதவிக் காலம் நவம்பர் 8-ம் தேதியும் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டசபையின் பதவிக் காலம் அக்டோபர் 27-ம் தேதியும் நிறைவடைகின்றன.

இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விநாயகர் சதுர்த்தி விழா, நவராத்திரி, தசரா கொண்டாட்டங்க ளின்போது குறுக்கிடாதபடி வாக்குப்பதிவு தேதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நவராத்திரி விழா அக்டோபர் 3-ம் தேதி நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வாக்குப் பதிவை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இரண்டு வார தேர்தல் பிரச்சா ரத்தால் பண்டிகை கொண்டாட் டங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக அக்டோபர் 3-வது வாரத்தில் மகாராஷ்டிரம், ஹரியாணாவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிசம்பரில் காஷ்மீர், ஜார்க்கண்டில் தேர்தல்

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப் பட்டது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இப்போது அதே அணுகுமுறையில் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இரு மாநிலங்களிலும் வாக்குப் பதிவை நடத்த ஆணையம் ஆலோசித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in