புல்வாமா தாக்குதல்: உயிர் துறந்த வீரர்களுக்கு தேசமே திரண்டு அஞ்சலி; இறுதி சடங்குகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

புல்வாமா தாக்குதல்: உயிர் துறந்த வீரர்களுக்கு தேசமே திரண்டு அஞ்சலி; இறுதி சடங்குகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Updated on
2 min read

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்து வருகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மறைந்த வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த வீர்ரகளின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்து வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு மறைந்த வீரர் மோகன் லாலின் உடல் கொண்டு வரப்பட்டது. அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், வீரர் மோகன் லால் உடலக்கு அஞ்சலி செலுத்தினார். மோகன் லாலின் மகள் ராணுவ முறையில் ‘சல்யூட்’ செய்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வாரணாசியில் மறைந்த வீரர் ரமேஷ் யாதவ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் சந்தோலியில் மறைந்த வீரர் அவந்தேஷ் குமார் யாதவின் உடல் கொண்டு வரப்பட்டபோது, ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே வீரர் கோவிந்த்புராவில் ரோஹித்தாஸ் லம்பாவின் உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in