

விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்வதில் கேபிள், டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதால், அவர்களுக்குக் கூடுதல் அவகாசத்தைத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வழங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 31-ம்தேதி வரை விரும்பும் சேனல்களை நுகர்வோர்கள் தேர்வு செய்து அளிக்கலாம்.
டிராய் அறிக்கையின்படி, இதுவரை கேபிள் வாடிக்கையாளர்களில் 65 சதவீதம் பேர், டிடிஹெச் வாடிக்கையாளர்களில் 35 சதவீதம் பேர் விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், நாட்டில் 10 கோடி கேபிள் வாடிக்கையாளர்களும், 6.7 கோடி டிடிஹெச் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை, கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் தேர்வு செய்யும் புதிய முறையை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான கேபிள், டிடிஎச் சேவைகளை வழங்க சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், விருப்பமான சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதில் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். புதிய முறைக்கு வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலும், ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் திட்டத்தையே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேபிள், டிடிஹெச் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிராய் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.