அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற அமர்வில் இருந்து நீதிபதி திடீர் விலகல்; மேலும் தாமதமாகிறது விசாரணை

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற அமர்வில் இருந்து நீதிபதி திடீர் விலகல்; மேலும் தாமதமாகிறது விசாரணை

Published on

அயோத்தி நில விவகார வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு. லலித் திடீரென விலகியுள்ளார். இதையடுத்து புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதால் விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உ.பி.யில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தன.

இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றுவிட்டார்.

அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தநிலையில் அயோத்தி வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்க முன்பு நியமித்தது. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த அமர்வு வழக்கை இன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வழக்கு அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிபதி யு.யு. லலித் அயோத்தி தொடர்பான மற்றொரு வழக்கில் அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக வாதாடியதை நினைவு கூர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு.லலித் கூறினார்.

இதைத்தொடர்ந்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது இருப்பதால் வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in