

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்தனர். பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு அருகில் நேற்று துயரத்தில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினர். படம்: பிடிஐ
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி, தபோடி பகுதிகளில் 13 பேரும், புனே நகரின் ஹடப்சர், காலேபடல் பகுதிகளில் 5 பேரும் சாராயம் குடித்ததால் உயிரிழந்தனர். பிஎன்எஸ் மற்றும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யோகேஷ் வான்கடே என்ற நபர் அதிகாரியிடம் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மெத்தனால் என்ற நச்சு ரசாயனத்தை சாராயத்தில் கலந்ததாக யோகேஷ் வான்கடேஒப்புக் கொண்டுள்ளார். யோகேஷ் வான்கடே தவிர மேலும் 4 பேர் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர். மேலும் இருவர் மாநில கலால்துறையின் பிடியில் உள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது‘‘ என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் ஆணையர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.