

மும்பை: நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும் அதிகளவில்தான் உள்ளன. கடந்த 2024-ம் நிதியாண்டில் கரன்சி நோட்டுகள் அச்சிட ரூ.5,101.4 கோடி செலவானது. இது 2025-ம் நிதியாண்டில் ரூ.6,372.8 கோடியாக அதிகரித்தது. அதிக கரன்சி நோட்டுகள் அச்சிட ஆர்டர் கொடுக்கப்பட்டதால் இதற்கான செலவும் அதிகரித்தது.
மேலும் கரன்சி நோட்டுகள் காகிதத்தில் அச்சிடப்படுவதால், அவை விரைவில் சேதம் அடைகின்றன. கடந்தாண்டில் 23.8 பில்லியன் சேதம் அடைந்த கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி அழித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 12.3 சதவீதம் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகள்.
நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுக்களாக அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிட கடந்த 2012-ம் ஆண்டே மத்திய அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளை பரிசோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிடுவதில் அப்போது சில தொழில்நுட்ப சவால்கள் இருந்ததால், இத்திட்டம் நிராகரிக்கப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களின் வரவால் பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இவற்றை ஏடிஎம் இயந்திரங்களாலும் விநியோகிக்க முடியும் என்பதால், பிளாஸ்டிக் கரன்சி திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.