

கேரளாவில் பரபரப்பபை ஏற்படுத்திய, மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஹாதியாவின் தந்தை கே.எம். அசோகன் பாஜகவில் இணைந்துள்ளார். சபரிமலை போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா(வயது24). இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். பின்னர், தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து போலீஸில் அசோகன் புகார் செய்ததோடு, கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால், ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக ஹாதியா நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தது, திருமணப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அவரது கணவர் ஷபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ஏற்பதாக அறிவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் ஹாதியாவின் தந்தை அசோகன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் ஒரு கட்சி பாஜக என்பதால் அந்த கட்சியில் இணைந்துள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றன. ஆனால் பாஜக மட்டுமே இந்துக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் கட்சியாக உள்ளது.
எனவே அந்த கட்சியில் இணைந்துள்ளேன். மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பது தான் எனது கருத்து. சபரிமலை விவகாரத்தில் மக்கள் நம்பிக்கை காப்பாற்றபட வேண்டும். சபரிமலை போராட்டத்தை முன்னெடுக்க போகிறேன்’’ எனக் கூறினார்.