

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரிடம் இருந்து பணம் வரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கரில் 2-வது கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
கொரியா மாவட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''2016-ம் ஆண்டு மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நேர்மையான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பணக்காரர்களும், கறுப்புப் பணம் பதுக்கியவர்களும் தப்பித்துக் கொண்டனர். ஏழை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக் கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேளாண் தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, பெரும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளார்.
ஆனால், நான் சொல்கிறேன், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். இதை பிரதமர் மோடி குறித்துக்கொள்ளட்டும்.
நாங்கள் கடன் தள்ளுபடி செய்தால் பணம் எங்கிருந்து வரும் என்று பாஜகவினர் கேட்கிறார்கள். நான் பிரதமர் மோடியிடம் சொல்கிறேன், விவசாயிகளின் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய விஜய் மல்லையா, நிரவ்மோடி, அனில் அம்பானி ஆகியோரிடம் இருந்து பணத்தை எடுத்து, கடனைத் தள்ளுபடி செய்வோம்.
தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடியையும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ரூ.25 ஆயிரம் கோடியையும் வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்கள்.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் இருந்து அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்க பிரதமர் மோடி உதவியுள்ளார். நேர்மையானவர்களிடம் இருந்தும், ஏழைகளிடம் இருந்தும் பணத்தை பண மதிப்பிழப்பு மூலம் மோடி திருடிவிட்டார்.
வீட்டில் தலையணைக்கு அடியிலும், மெத்தைக்கு அடியிலும் பணத்தை மறைத்து வைத்தவர்களிடம் இருந்துதான் பண மதிப்பிழப்பு மூலம் நடவடிக்கை எடுத்து, கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவந்தேன் என்று மோடி பேசி இருக்கிறார்.
நான் உங்களிடம் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் எந்தவிதமான திருட்டும் செய்யவில்லை. அந்தத் திருட்டை செய்தவர் பிரதமர் மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நேர்மையானவர்களை வங்கியின் முன் வரிசையில் நிற்கவைத்துவிட்டார். வங்கியின் வாசலில் கோட் சூட் அணிந்த கோடீஸ்வரர்கள் யாரேனும் நிற்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எப்போதும் நிறைவேற்றக்கூடிய உண்மையான வாக்குறுதி அளிக்கும். ஆனால், பாஜக போல் அல்ல. கடந்த 15 ஆண்டுகளில் எனது பேச்சை நீங்கள் கவனித்து இருந்தால், புரியும் நான் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது இல்லை. நான் என்ன வாக்குறுதி அளித்தேனோ அதை நிறைவேற்றி இருக்கிறேன்.
ஆனால், பிரதமர் மோடியும், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும் ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. ஊழல் குறித்து அடிக்கடி பேசும் பிரதமர் மோடி முதல்வர் ராமன் சிங் ஊழல் குறித்து ஏன் பேசவில்லை. ரூ.5 ஆயிரம் கோடி சிட்பண்ட் ஊழலில் ராமன் சிங் மகன் சிக்கியுள்ளார்''.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.