

மகாராஷ்டிராவில் உள்ள ஷனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தபோது புகழ்ந்தவர்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ‘தி இந்து’ என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ‘ஹியுமன்ஸ்’ மற்றும் ‘புரோகமன கலா சாஹித்ய சங்கம்’ உள்ளிட்ட 50 அமைப்புகள் சேர்ந்து ‘வீ தி பீப்பிள் # வித் அவர் கான்ஸ்ட்டியூஸன்’ (We the people # with our constitution) என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் இன்று கருத்தரங்கம் நடத்தின. இதில் மூத்த பத்திரிகையாளர் 'தி இந்து' என்.ராம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் கேரள மாநிலம் ஒன்று. ஆனால், இப்போது சோதித்துப் பார்க்கப்படுகிறது. அந்தச் சோதனையில் மக்கள் உறுதியுடன் இருந்து தங்களை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
மகராஷ்டிராவில் உள்ள ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்தபோது அதை வரவேற்றவர்கள் இப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையும் போது எதிர்க்கிறார்கள். நச்சு அரசியல் குழுக்களால் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதை எதிர்த்து நிற்க வேண்டும். இந்தியா முழுமைக்கானது இந்தப் பிரச்சினை .
இந்திய அரசமைப்புச் சட்டத்தை சேதப்படுத்த அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால், பிரச்சினையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மற்ற நாடுகளைப் போல் அல்ல, நம்முடையது அரசமைப்புச்சட்டம் மதச்சார்பற்றது. கேரள மக்கள் தங்களின் உறுதியையும், உணர்வையும் வெளிப்படுத்த இது சந்தர்ப்பமாகும். சபரிமலையில் வன்முறையை உருவாக்கும் மோசமான குழுக்களை அமைதியாக இருக்கும் பெரும்பான்மையினர் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு என் ராம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் இந்து அபியான் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யார் எதிர்க்கிறார்களோ அவர்களே கேரளத்தின் குரலாக இருக்கிறார்கள். ஆனால், இது தவறு என்று நாம் நிரூபிக்க வேண்டும். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெண்கள் தெருக்களில் வந்து எதிர்ப்பதைப் பார்க்கிறோம். இது கேரளத்தின் குரல் அல்ல என்பதை அரசமைப்புச் சட்டத்துடன் இருக்கும் மக்களும், பெண்களும் நிரூபிக்க வேண்டும்"என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்த அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அனூப் ராஜேந்திரன் பேசுகையில், "எங்களுடைய மாநிலம் முற்போக்கு சமூகத்தைக் கொண்டது. நாங்கள் அரசமைப்புச்சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின், பலர் அந்தத் தீர்ப்புக்கு எதிராகப் புறப்பட்டனர். இது வெளிப்படையாக அரசமைப்புச் சட்டத்தை எதிர்க்கவும், சட்டத்தை எதிர்க்கவும் அழைப்பு விடுத்தனர். இது சரியானது அல்ல" எனத் தெரிவித்தார்.
கல்லூரி மாணவி ஹரிகிருஷ்ணா பேசுகையில், மாநிலத்தில் நிலவும் சூழலை சில குழுக்கள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்த முயற்சிக்கின்றன. முதலில் அவர்கள் நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார்கள். அதன்பின் நம்பிக்கை என்ற அடிப்படையில் எதிர்க்கிறார்கள் எனத் தெரிவித்தார்.